அதிகாரமும் தண்டப்பண்ணுதலும்
சுதீர் செந்தில்
கடந்த மாதம் முழுவதும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களிலும் எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதி ‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்ட ‘மாதொருபாகன்’ நாவலையொட்டி எழுந்துள்ள சர்ச்சை பற்றிய விவாதங்கள் இடம் பெற்றன. சென்னையில் நடைபெற்ற 38ஆவது புத்தகக் காட்சியிலும் படைப்பாளர்களாலும் வாசகர்களாலும் இதுபற்றிய விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. இலக்கிய உலகைச் சாராத பெரும்பாலான பொதுவாசகர்களுக்கு ‘மாதொருபாகன்’ நாவலையொட்டி நடந்துவரும் விஷயங்கள் புரியவில்லை. தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் மாதொருபாகன் பற்றிய செய்திகள் இந்நாவலை வாசிக்க தூண்டுவது இயல்புதான்.
புத்தகக் காட்சியில் முதல் சில நாள்கள் ‘மாதொருபாகன்’ நாவல் கிடைத்தது. பின்னர் அது, பெருமாள் முருகனின் ‘வேண்டுகோளுக்கு இணங்க’ விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. தமிழ் இலக்கியப் புலத்தில் ஒரு படைப்பு பற்றிய எதிர்வினைகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், ஹெச்.ஜி. ரசூல் போன்ற எத்தனையோ படைப்பாளிகளும் ஆனந்தவிகடன், நக்கீரன் உள்பட பல இதழ்களின் ஆசிரியர்களும் சர்ச்சைகளில் இடம் பெற்றுள்ளனர். என்றாலும், பெருமாள் முருகன் விஷயத்தில் கிடைத்திருக்கும் ஊடகக் கவனம் இதுவரைக்கும் தமிழகத்தில் நிகழ்ந்திராத ஒன்று எனலாம்.
ஆனால், கருத்து சுதந்திரம் பற்றி மட்டுல்ல; தணிக்கையின் அரசியல் குறித்தும் நாம் தொடர்ந்து உரத்த குரலில் விவாதிக்கின்றோம். அவை ஒவ்வொரு முறையும் ஏதோ அது ஒரு தனிப்பட்ட பிரச்சினைபோல் உலர்ந்து உதிர்ந்துவிடவது துரதிருஷ்டம்தான்.
பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன? அது நமக்குச் சொல்வதென்பது என்ன? என்கிற இரண்டு கேள்விகள் நம் முன் உள்ளன.
நான்கு ஆண்டுகளுக்கு முன் பல நிறுவனங்களின் நிதி உதவியுடன் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தின் நிதி உதவிபெற்று, ஆய்வு நோக்கில் பெருமாள் முருகனால் எழுதப்பட்ட ஒரு நாவல்தான் ‘மாதொருபாகன்’. அந்த நாவல் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியின் உணர்வுகளை விரிவாகச் சித்திரிப்பதுடன் அத்தகைய தருணங்களில் சில இனக்குழுக்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் எனவும் பேசுகின்றது. பெருமாள் முருகனின் ‘கருதுகோள்’ தவறானதாகத் தோன்றவில்லை. தமிழ்ச் சமுதாயத்தில் இது வழக்கத்தில் இருப்பதுதான் என்பதை இன்றைக்கு எழுபது வயதைக் கடந்த, இன்னமும் நவநாகரிகத்தைக் குடித்துக் கரைகாத கிராமங்களில் உள்ள, எந்த ஒரு முதியவரும் சொல்வார்.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குக் குழந்தை இல்லையென்றால், அதை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு இனக் குழுவுக்குள்ளும் அல்லது சாதிக்குள்ளும் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. அவை பல படிநிலைகளைக்கொண்டவை. ‘திருவிழாவிற்குப் பிறந்தவன்/ள்’ என்பது ஒரு வசவுச் சொல். இந்தச் சொல் எவ்வாறு வந்தது என யோசித்தால், அதில் உள்ள தர்க்கம் புரிந்தால், பெருமாள் முருகன் எழுதியதில் எவ்விதத் தவறுமில்லை என்கிற முடிவுக்கு ஒருவரால் எளிதில் வரவியலும்.
திருச்சி அருகே மணப்பாறைப் பக்கமுள்ள வீரப்பூர் என்ற ஊரில் நடைபெறும் திருவிழாவொன்றில் இத்தகைய நடைமுறையொன்று இருந்திருக்கிறது அல்லது இருக்கிறது எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய பதிவொன்று கவியோவியத் தமிழன் என்பவர் எழுதிய ‘ஊடாடும் வாழ்வு’ என்ற சிறுகதைத் தொகுப்பில் காணப்படுகிறது. இந்தப் பழக்கத்துக்குப் பெயரே ‘கரை தாண்டல்’ என்றும் சுட்டப்படுகிறது.
இதேபோல, ஜவ்வாதுமலைப் பகுதியிலுள்ள ஜம்னாமரத்தூர் என்ற மலைப் பகுதிச் சிற்றூரில் இன்னமும் முருகன் கோவில் திருவிழாக் காலத்தில் திரளும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்களிடையே இத்தகைய நடைமுறைகள் இருப்பதாகவும் ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆய்வுக்காகக்கூட இந்தப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத சூழலைச் சில மதவாத சக்திகள் ஏற்படுத்திவிட்டதாகவும் சென்னையைச் சேர்ந்த லயோலா கல்லூரியின் சமூகவியல் ஆய்வு மாணவர் ஒருவர் தெரிவிக்கிறார். இவற்றையெல்லாம் விளக்குவதற்கான இடம் இதுவல்ல; அதைப் பிரிதொரு கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
தமிழர்கள் மட்டும் இன்றைக்கு இருப்பதைப் போல, கோட், சூட் அணிந்துகொண்டு, வெள்ளையும் சொள்ளையுமாக நேரடியாக வானத்திலிருந்து வந்து குதித்திருக்க வாய்ப்பில்லை. தவிர, சோதனைக் குழாயும் செயற்குக் கருத்தரிப்பு மையங்களும் இல்லாத காலகட்டத்தில் இவையெல்லாம் ஒரு சங்கதிகளாகவே இருந்திருக்கவும் முடியாது. இன்னும் நூறு, இரு நூறு ஆண்டுகளுக்குப் பின், இப்போதைய `நாகரிகத்’ தமிழர்களின் எந்தெந்தப் பழக்கங்களை எல்லாம் எழுத்தாளர்களால் எழுத முடியாத சூழல் ஏற்படுமோ, சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை.
நான்கு ஆண்டுகள் கவனிக்கப்படாமல் இருந்த நாவலைத் திருச்செங்கோட்டுக்காரர்கள் தற்போது `திடீரெனக்‘ கவனித்துத் தங்கள் எதிர்ப்பை இத்தனை தீவிரமாகக் காட்டியுள்ளார்கள். அவ்வாறு தங்கள் கோபத்தைக் காட்டியவர்களில் பெரும்பாலானோர் பெருமாள் முருகன் பிறந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், அவர்கள் தங்களுடைய வசதி கருதி, சாதிப் பெருமைக்கு மதப் போர்வையைப் போர்த்திக்கொண்டார்கள். தங்களுக்குத் தேவைப்படும் தருணங்களில் - சந்தர்ப்பங்களில் - மதச் சாயத்தைச் சாதிகள் பூசிக்கொள்வதும் சாதிச் சாயத்தை மதங்கள் பூசிக்கொள்வதும் இயல்பானதே.
மாதொருபாகன் பிரச்சினையில் இந்துத்வ சக்திகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை. திருச்செங்கோட்டில் பெருமாள் முருகனுக்கு எதிராக நடத்தப்பட்ட எந்தப் போராட்டத்திற்கும் அவை உரிமையும் கோரவில்லை. பெருமாள் முருகன் பிறந்த சாதியைச் சேர்ந்தவர்களே இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார்கள் என்பதை யூகிக்க முடிகின்றது.
பெருமாள் முருகனுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைக்கு மதச்சாயம் பூசப்பட்டதால் பிரச்சினை திசை திருப்பப்பட்டுவிட்டது. அப்படியே இந்துத்வ சக்திகள் இதன் பின்னால் இருந்தாலும் அவர்களிடம் என்ன நியாயம் இருக்கப் போகிறது பெருமாள் முருகனுக்கு எதிராக? இந்து மதத்திலும் புராணங்களிலும் இல்லாதவொன்றைப் புதிதாக அவர் எழுதிவிடப் போகிறாரா?
இதனால் பெருமாள் முருகனுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் புரிந்துகொள்ளக் கூடியதே. இந்தப் பிரச்சினையில் எழுத்தாளர்கள் அனைவரும் பெருமாள் முருகன் பக்கம் நின்றார்கள். ஆனால், பெருமாள் முருகன் அவசரப்பட்டு சமரசமாகப் போய்விட்டார். அதுவும் தன்னுடைய படைப்புகள் அனைத்தையுமே திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்திருப்பது அவருடைய விரக்தியின் உச்சத்தையே காட்டுகின்றது.
இதில் பெருமாள் முருகனுடைய கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகின்றது. இந்தப் பிரச்சினை தொடங்கியதிலிருந்தே அவரது நண்பர்கள் அவரோடு தொடர்பில் இருந்தார்கள். த.மு.எ.க.ச., கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் உடனடியாக சாத்தியப்பட்ட இடங்களில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ‘உயிர்மை’ இதழின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன், த.மு.எ.க.ச. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதுடன், பெருமாள் முருகனுக்கு ஆதரவாகத் தலையங்கமும் எழுதினார். ‘தினமணி’ நாளேடும்கூட தலையங்கம் எழுதியது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆங்கில, தமிழ் ஹிந்து நாளிதழ்கள்’, பல பக்கங்களை, பல பத்திகளைப் பெருமாள் முருகனுக்காக ஒதுக்கின. கேரளத்தில் மக்கள் மத்தியில் ‘மாதொருபாகன்’ நாவல் வாசிக்கப்பட்டது. தில்லி எழுத்தாளர்கள் கண்டித்தனர். முகநூலில், இணைய தளங்களில் பரவலாகப் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகப் பலர் செயல்பட்டனர். ஆங்காங்கே கூட்டங்களும் நடைபெறத் தொடங்கின. ஜனநாயக, முற்போக்கு, தமிழிய அரசியல் தலைவர்கள் எல்லாமும் கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டங்களையும் முன்னெடுக்கத் தொடங்கினர்.
ஆனால், இவையெதுவும் பெருமாள் முருகனுக்கு ஏனோ தார்மிக பலத்தை அளிக்கவில்லை போலும். யாருமே எதிர்பாராத முடிவை எடுத்து அறிவித்துவிட்டார். அவர் களத்தில் உள்ளவர். அவருடைய ஆதரவு சக்திகள் திருச்செங்கோட்டுக்குச் சென்றார்களா எனவும் சிலர் கேடுகிறார்கள். ‘வெளியில்’ இருந்து ஆதரவு என்பது ஏட்டுச் சுரைக்காய் போன்றது என்று பெருமாள் முருகனின் இந்தச் சமரச முடிவிற்கு நியாயம் கற்பிக்கவும் செய்கிறார்கள்.
ஆனால், எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிராக எழுந்த ஆபத்தைத் தமிழ் இலக்கியப் புலத்தில் சரியாகவே கையாண்டார்கள். அதிகாரத்தின் அதிகாரத்திற்கு பங்கம் வராத வரைக்கும் எந்தவோர் அரசும் தங்கள் ஜனநாயக வேடத்தைக் கலைக்காது. இது தெரிந்தபோதிலும் முற்போக்கு சக்திகள் இந்த அதிகார அமைப்பின் முன் தங்கள் போராட்டங்களை முன்வைக்கின்றார்கள். இந்த அமைப்பைப் பயன்படுத்தி அதில் ஓரளவு வெற்றிபெற்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. மிக சமீபத்திய எடுத்துக்காட்டு, ஹெச்.ஜி. ரசூல். தான் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக ஊர் விலக்கம் செய்யப்பட்ட அவர், கடுமையான வாதைக்கும் உள்ளானார். என்றபோதும் மனம் தளராது களத்தில் நின்று போராடினார். அதில் வெற்றியும் அடைந்தார். அவருக்கும் முற்போக்கு சக்திகள் ஆதரவு அளிக்காமலில்லை. ஆனால், பெருமாள் முருகனுக்குக் கிடைத்த ஆதரவுக்கு முன் அவை ஒன்றுமேயில்லை. ரசூல் தனக்கு நேர்ந்த அநீதியைச் சரியாகப் புரிந்துகொண்டது மட்டுமல்லாமல் அதையே சமூகத்தின் முன்னும் வைத்தார். இன்றளவும் தான் நம்புவதை எழுதுகிறார். அந்த கருத்துகளில் உறுதியாக உள்ளார். ரசூல்போல மேலும் பல எழுத்தாளர்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
ஆனால், பெருமாள் முருகன் செய்ததும் செய்துகொண்டிருப்பதும் என்ன? அவருக்குத் தன் எழுத்தின் மீது பெருமிதம் இல்லையா? அப்படியென்றால் ஏன் எழுதுகிறார்? ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணம் பெற்று இந்த நாவலை எழுதுமளவிற்கு அத்தனை வறுமையிலா பெருமாள் முருகன் இருக்கிறார்? சமகாலத்தில் அடுத்தவேளை உணவிற்கு வழியில்லாமல், தன் எழுத்துகளின் மீதான தார்மிக நம்பிக்கைகளோடு வாழும் பல எழுத்தாளர்கள் உள்ளனர். ஆனால், பெருமாள் முருகன் அத்தகைய வறுமையில் வாடுபவர் இல்லை. ‘காலச்சுவடு’ இத்தகைய வாய்ப்பை பெற்றுத் தருகிறது. அதைச் செய்தும் முடிக்கிறார் பெருமாள் முருகன். எழுத்தாளனுக்கு ஒரு ‘திமிர்’ இருக்கும், இருக்கவும் வேண்டும். அப்படி ‘திமிர்’ இருக்கும் எழுத்தாளன் எழுதுவதற்காக வாழ்வான். அதற்காக சாகவும் செய்வான்.
ஆனால், மேற்குத் தமிழகத்தில் ஆதிக்க சாதியினராக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்த பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல், எதையும் உடைத்தெறியும், ஒரு முற்போக்கான நாவலுமல்ல. ஆனால், அவர் சார்ந்த ஆதிக்கச் சாதியோ, அதில் ஏதோ ‘முற்போக்கை’க் கண்டுவிட்டதைப் போல் இத்தனை பிரச்சினைகளைக் கொடுத்துவருகின்றது. பெருமாள் முருகன் நேர்மையுடன் இரண்டு விஷயங்களை அறிவித்து இருக்க வேண்டும். ஒன்று, இந்தப் பிரச்சினையை ஊற்றாக இருந்து உருவாக்கியது இந்துத்வ சக்திகளல்ல; மாறாக, தான் சார்ந்திருக்கும் கொங்கு வேளாள கவுண்டர்கள்தான்.
இரண்டாவது, இதில் மதவாதம் என்பதெல்லாமில்லை. அந்த முகமூடியை அணிந்து கொண்டுவரும் சாதிவெறிதான் அது என்பதை.
மதத்தைப் பகைத்துக்கொண்டுகூட இங்கு வாழ்ந்துவிட முடியும். ஆனால், சாதியைப் பகைத்துக்கொண்டு எப்படி வாழ்வது என்பதுதான் பெ.முருகன் கவுண்டருக்குப் பிரச்சினைபோல. எழுத்தாளன் என்பவன் சாதி, மதங்களைக் கடந்துவிட வேண்டும். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்குப் பிரச்சினை என்றவுடன் இலக்கியப் புலமே கொந்தளித்தது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் நீதிமன்றத்தில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டனர். நீதிமன்றத்திலிருந்து பெருமாள் முருகனுக்கு கடிதம் சென்றுள்ளது என்பதும் அதன்படி பெருமாள் முருகன் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டும் என்பதையும் அறிகிறோம். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் நாள் நீதிமன்றத்திற்குப் பெருமாள் முருகன் வருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெருமாள் முருகன் இடதுசாரி இயக்கங்களுடனும், இன்னும் சொல்லப்போனால் மார்க்சிய - லெனினிய இயக்கங்களோடும் தொடர்பில் இருந்தவர் என்று அறிய முடிகின்றது. மட்டுமல்ல, அவர் கவுண்டர் அல்லாத தலித்துமல்லாத ஒருவரை மணம் முடித்திருக்கிறார் என்றும். என்றபோதும் ஏன் இப்போது அவரிடம் துணிவு என்பது துளியும் காணக் கிடைக்கவில்லை எனத் தெரியவில்லை.
காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன் அதிகார மய்யத்தில் இருப்பவர். அவர்கூட இனி பெருமாள் முருகன் எழுத மாட்டார் எனச் சொல்கிறார். இந்தப் பிரச்சினையையொட்டிப் பல வதந்திகள் உலவின. அவற்றில் ஒன்று, காலச்சுவடுதான் இந்தப் பிரச்சினையை தன் வியாபாரத்திற்காக கொளுத்திப் போட்டுள்ளது என்பது. ஆனால், அது உண்மையல்ல என்பது இன்றைக்கு நிரூபணமாயிற்று. ஒருவேளை காலச்சுவடு கண்ணன் நினைத்திருந்தால், குறைந்தது பத்தாயிரம் மாதொருபாகன் நாவலை புத்தகக் காட்சியில் விற்பனை செய்திருக்க முடியும். செய்யவில்லை.
“தோழர் பெருமாள் முருகன் அவர்களே. திருச்செங்கோடு மட்டுமே அல்லது நாமக்கல் மட்டுமே உலகம் அல்ல. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, அவர்கள் தங்களுடைய சாதியே என்றாலும், எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களும் அல்ல. பொருளாதார நிலையிலோ, சமூக நிலையிலோ பின்தள்ளப்பட்ட சூழலில், அந்தக் குக்கிராமத்திலேயே வாழ விதிக்கப்பட்டு, அந்த ஆண்டைகள் இடும் கூலியை நம்பியே பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கும் அன்றாடங்காய்ச்சியும் அல்ல நீங்கள்”.
எழுத்தாளரோ அல்லது வெறும் ஆளோ, பெருமாள் முருகன் என்பிர நபர் நிஜமாகவே ஒரு நாள் செத்துதான் போவான், அப்போது அறிக்கையெல்லாம் கொடுக்க முடியுமோ, இல்லையோ. ஆனால், பெருமாள் முருகனின் எழுத்துகள் எதுவும் எப்போதும் சாகவே சாகாது, என்னதான், எல்லாரும் புத்தகங்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு, பெருமாள் முருகனிடம் காசு வாங்கிக் கொண்டாலும். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் எழுத்துகளுக்கும் பொருந்தும்.
ஆக, பெருமாள் முருகனிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது எல்லாம் இப்படியாகப்பட்ட ஒரு வேண்டுகோளை மட்டும்தான்: “ஆசிரியனான பெ.முருகன் கவுண்டர் ஆகிய நான் செத்துவிட்டேன். பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளன் உயிரோடு இருக்கின்றேன். எனக்கு என் சாதிக்காரர்களாகிய கவுண்டர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருகின்றது.`கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தகுடியான’ தமிழ்ச் சமுதாயமே, என்னைக் காப்பாற்று”..
மாதொருபாகன் நாவலின் கதைச் சுருக்கம்: காளி அவன் மனைவி பொன்னாள் ஆத்மார்த்தமாக வாழும் இணையர்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தைச் செல்வமில்லை. பொன்னாள் குழந்தை பேற்றிற்கு ஏங்குகிறாள். பொன்னாளின் ஏக்கத்தைக் கண்டு காளி மனம் வருந்துகிறான்.
திருச்செங்கோட்டுப் பகுதி மக்களிடம் ஒரு நம்பிக்கை யிருக்கிறது. அவ்வூர் கோவில் திருவிழா இரவில் பிள்ளையில்லா பெண்கள் கலந்துகொண்டு அறிமுகற்ற ஏதோவோர் ஆணோடு உறவுகொல்லலாம்.
அத்தைய திருவிழாவில் பொன்னாள் கலந்துகொள்ள வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள் அவளும் அதற்கு உடன்படுகிறாள். ஆனால் காளிக்கு இதில் விருப்பமில்லை. காளியும் பொன்னாளின் அண்ணன் முத்துவும் அந்தத் திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் என்றபோதிலும். திருவிழா அன்று காளியை அளவுக்கதிகமாக குடிக்கச் செய்து தங்கையையும் அம்மாவையும் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான் முத்து. மறுநாள் இதை அறிந்து பொன்னாள் மீது கோபம்கொள்கிறான் காளி.
உயிர் எழுத்து, பிப்ரவரி 2015