ஆவணக்களரியாகும் புதினம்
சு. தியடோர் பாஸ்கரன்
கூளமாதாரி, கங்கணம் போன்ற படைப்புகள் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள பெருமாள்முருகனின் அண்மை நாவல் மாதொருபாகன். பொதுவாக சிவாலயங்களில் மூலவர் லிங்கரூபத்தில்தான் இருப்பார். ஆனால் திருச்செங்கோட்டில் மலை மேல் உள்ள ஆலயத்தில் மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்றறியப்படும் மாதொருபாகன் சிலாரூபத்தில் உள்ளார்.
நாவல் எழுதுவதற்கு ஆயத்தமாகப் பின்புல ஆய்வுசெய்வது தமிழ் இலக்கியத்திற்குப் புதிது. அதனால்தான் பல நாவல்களில் கால முரண்பாடுகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. ஆய்வுசெய்வதற்கும் விவரங்கள் சரியா என்று பார்ப்பதற்கும் வலையில் இன்று மென்பொருட்கள் பல இருந்தும் இவற்றை இலக்கியப் படைப்பிற்குப் பயன்படுத்துபவர் நம்முள் குறைவு. பெருமாள்முருகனுக்கு நாவல் எழுதுவதற்குக் கிடைத்த நல்கையைக்கொண்டு திருச்செங்கோடு பகுதியையும் வரலாற்றையும் ஆழ்ந்த கள ஆய்வுசெய்து மாதொருபாகன் நாவலை உருவாக்கியிருக்கிறார். நாவலின் இடமும் காலமும் துல்லியமாகச் சித்தரிக்கப்படும்போது அதன் உயிரோட்டம் தீவிரமாகின்றது.
ஒரு வேளாண்மைசார்ந்த சமூகத்தின் இக்கதை நடக்கும் காலகட்டம் பிரிட்டீஷ் ஆட்சியின் கடைசிப் பகுதி. அந்த வரலாற்றுப் பகுதியைப் பல வர்ணனைகளால் உருவாக்கிக் கதையின் பின்புலத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றார். சேலம் ஜில்லாவில் மட்டும் மதுவிலக்கு பரிசோதனையாக அமல்செய்யப்பட்ட சமயம். சேலத்து வக்கீல் (ராஜாஜி) பற்றி ஒரு கதாபாத்திரம் பேசுகிறது. ஸ்ரீவள்ளி படத்தின் கதா நாயகி ருக்மணியை (இன்றைய நடிகை லட்சுமியின் தாயார்) பற்றித் தெருக்கூத்துக் கலைஞர் குறிப்பிடுகிறார். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கலாச்சாரச் சூழலை எளிதாக மீட்டெடுக்கின்றார் நூலாசிரியர்.
சிறு படிமானத்தையும் கவ்விப்பற்றும் உடும்பு, பாறைப்பல்லி, ஒடக்கான் திண்ணிக் கழுகு (ஷிக்ரா), பனைமரத்தில் கூடுகட்டும் கரிக்குருவி, சுல்லிப்பூ, காட்டுமல்லி எனக் கொங்குநாட்டின் வறண்ட பூமியின் உயிரினங்கள் நாவலில் ஆங்காங்கே தோன்றிக் கதைக்களத்தின் புறவுலகிற்கு உயிரையும் நம்பகத்தன்மையையும் கொடுக்கின்றன. திருவிழாவின் போது நடைபெறும் கூத்தின் ஒரு பகுதியை அப்படியே நாவலாசிரியர் வாசகர்களுக்குத் தருகிறார்.
தெருக்கூத்தில் வரும் பாலியல் சார்ந்த நகைச்சுவை இயல்பாக நாவலில் பதிவுபெறுகிறது. ‘இடகரடக்கல்’ என்னும் வகையாக அறியப்படும் பாலியல் வசவுச் சொற்றொடர்களும் (கெட்ட வார்த்தைகள்) சொல்லடைவுகளும் பழமொழிகளும் மொழிவளத்தின் ஒரு பரிமாணம் என்று நினைக்கின் றேன். (தானும் செய்யமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்.) இவை காலப்போக்கில் மறைந்து போய்விடுமோ என்று நான் வருந்தியதுண்டு. தலித் இலக்கியத்தில் கலகக்குறியீடாக இவை இடம்பெற ஆரம்பித்தது ஒரு வரவேற்கத்தக்க பதிவு. இன்று தலித் எழுத்தாளர்கள் வேறு சிலர் படைப்பிலும் இதைக் காணலாம். பெருமாள் முருகன், ராஜ்கௌதமன் இவர்களது படைப்புகளில் இவை பதிவுசெய்யப்பட்டு பாதுகாக்கப்படுவது நல்ல அறிகுறி. ஏறுவெயில் நாவல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டபோது இந்த ‘அவையல் கிளவி’ என்று எழுத்தில் ஒதுக்கப்பட்ட சொற்கள் அந்நூலில் வருவதால் கல்விப்புலத்துடன் ஏற்பட்ட இன்னல்களைப் பெருமாள்முருகன் ஆரண்யம் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைப்பேறற்ற குடியானவத் தம்பதியர் காளி - பொன்னாவை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையே உள்ள உறவில் இழையோடும் நெருக்கம், ஆழமாக, இயல்பாக வெளிப்படுத்தப்படுகிறது. தொ. பரமசிவன் ‘பண்பாட்டின் அசைவுகள்’ என்று குறிப்பிடும் பாரம்பரியங்கள் சில பெருமாள்முருகனின் நாவலில் பதிவு செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பல இடங்களில், வெவ்வேறு பின்புலத்தில் நிலவும் ஒரு பழக்கத்தைச் சார்ந்த கதை இது. பிள்ளைப்பேறு அற்ற பெண், திருவிழாவில் முன்பின் அறியாத, தனக்குப் பிடித்த ஆணுடன் பாலியல் தொடர்புகொண்டு கருவுருவது சமூகத்தால் காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபு. நூறாண்டுகளுக்கு முன் மின்விளக்குகள் கிடையாது என்பதை மனத்தில் கொள்ளுங்கள். டெஸ்ட் ட்யூப் குழந்தைகளுக்கு முற்பட்ட காலம். நானறிந்து முப்பதாண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் நான் பணிபுரிந்த இரண்டு இடங்களில் நடந்த திருவிழாக்களில் இத்தகைய பழக்கம் இருந்ததைப் பற்றி அறிந்திருக்கிறேன். ஒன்று, கோடைக்காலத்தில் அகண்ட காவிரி நதிப்படுகையில் நடக்கும் ஒரு திருவிழா. அந்த ஊரில் அதற்குத் துப்பட்டி திருவிழா என்று பெயர். அருகிலுள்ள ஐந்து சிவன் கோவில் உற்சவ மூர்த்திகள் ஆற்றின் நடுவே எடுத்துவரப்படுவார்கள். சூரியன் மறைந்த பின்னும் திருவிழா தொடரும். இளைஞர்கள் துப்பட்டி ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு வந்துவிடுவார்கள். பரந்த காவிரி மணல் படுகை அவர்களது களமாகிறது. இன்னொரு திருவிழா அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் விஸ்தாரமான, நீண்ட பிராகாரம் கொண்ட ஒரு கோவிலில் நடைபெறுவது. ‘சாமி குடுத்த பிள்ள’ ‘சாமி கொழந்த’ போன்ற சொற்றொடர்கள் மூலம் அறிவது இதுதான் என்கிறார் ஆசிரியர். இத்தகைய சடங்குகளை நம் சமூகம் ஏற்றுக்கொள்வதைப் பற்றி ஜெயமோகன் அண்மையில் சிலுவையின் பெயரால் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்: “விதிவிலக்குகளுக்கு, மீறல்களுக்கு ஓர் இடம் இட்டுத்தான் இந்திய நடைமுறை ஒழுக்கம் இருந்திருக்கிறது. மீறல்கள் என்பவை ஒரு சமூகத்தின் தீவிரமான சில தளங்களில் நடைபெறுகின்றன என்றும் அவற்றைத் தடைசெய்ய முடியாது என்றும் இந்திய ஒழுக்க மரபு கருதியது.”
திருச்செங்கோட்டில் நடக்கும் தேர்த் திருவிழாவில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி மக்களிடம் வேரூன்றிப் போன அந்தக் கோவில் சார்ந்த பல நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏற்பாட்டிற்குத் தன் கணவன் காளியின் அனுமதி இருக்கிறது என்றெண்ணிய பொன்னா ஒரு இரவு தனியாகப் புறப்பட்டுச் சென்று திருவிழாக் கூட்டத்துடன் கலந்துவிடுகிறாள். காளி அதை எவ்வாறு எதிர்கொள்கிறான்? மனித உறவுகள் சில சந்தர்ப்பங்களில் வெகு எளிதாக முறிந்து சிதைந்துவிடுவது பெருமாள்முருகனின் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. இதை ஏறுவெயில் நூலில் “உறவுகள் சிதறுவதையும் அது மனிதரின் பல முகங்களை வெளிப்படுத்தும் சக்தி கொண்டதையும்” அவர் பதிவுசெய்திருக்கிறார்.
பெருமாள்முருகனின் படைப்புகளில், உறவுகளைப்பற்றிய மின்னல் கீற்று போல் பளிச்சிடும் அவரது அவதானிப்புகள் புத்தகத்தை மூடிவைத்து, கண்களையும் மூடிச் சிந்திக்க வைக்கின்றன. “எத்தனை வருசக்கணக்காய் உடனிருந்தாலும் சில சந்தர்ப்பங்கள் அமையும்போதுதான் சில முகங்கள் தென்படுகின்றன. சந்தர்ப்பங்கள் வாய்க்காமல் உள்ளே மூடிக்கிடக்கும் முகங்கள் எத்தனையோ வெளிப்படாமலே புதைந்து போய்விடுகின்றன.” தனக்கு உறவுகளால் ஏற்படும் அதிர்வுகளை, காயங்களை எழுதுவதன் மூலம் ஆற்ற முடிகிறது என்று வேறோர் இடத்தில் அவர் கூறியிருக்கிறார்.
பல அரிய, பாரம்பரிய, ‘பாக்கு கடிக்கிற நேரத்தில்’ என்பது போன்ற சொற்பிரயோகங்களைப் பதிவுசெய்கிறார். மேகாலயாவில் வாழும் காசி மக்கள் இன்றும் தூரத்தை ஒரு பாக்கு மெல்லும் நேரம் என்ற அலகின் மூலம் குறிக்கிறார்கள். கொங்கு நாட்டுப் புறவுலகு சொற்களால் துல்லியமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மாதங்கள், பருவ காலங்கள் இவற்றின் பின் புலத்தில் போகும் கதையின் பின்னணியாக நாட்டார் மரபுகள், கலைகள் அமைகின்றன. இத்தகைய பதிவுகளால் நூலே ஒரு ஆவணக்களரியாகப் பரிணமிக்கிறது. தமிழ் மண்ணில் வேர்களை ஆழமாக, அகலமாகப் பதித்திருக்கும் படைப்பு இது.
காலச்சுவடு, ஜூலை 2011