மதிப்புரை: மாதொருபாகன்

ஆசிரியர்: அ.கா. பெருமாள்தேதி: 2011-07-01மூலம்: உயிர் எழுத்து

மதிப்புரை: மாதொருபாகன்

அ.கா.பெருமாள்

தமிழக நாட்டுப்புறப் பாடல்களில் ஒப்பாரிப் பாடல்களைவிட குழந்தையில்லாத ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்களில் சோகம் அதிகம். ஒப்பாரிப் பாடல்கள் பெரும்பாலும் கேட்டுப் பாடுதல் (இதற்கு ஒப்புச் சொல்லிப் பாடுதல் என்ற பெயரும் உண்டு) அல்லது ஏற்கெனவே புனையப்பட்ட பாடல் வரிகளை (எ.கா. ரதிமன்மத ஒப்பாரி) சூழ்நிலைக்கேற்ப மாற்றிப்பாடுதல் என்று அமைவதால் தனிமனித அனுபவம் இதில் வெளிப்படுவதில்லை. மலடிகளின் சோகம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானது.

வட்டிலிலே போட்ட சாதம்
வாரித்தின்ன பிள்ளையில்லை
கிண்ணிலே போட்ட சாதம்
கீறித்தின்ன பிள்ளையில்லை
அங்காடிக் கூடைதன்னை
அழைத்தவரப் பிள்ளையில்லை
தண்ணிக்குப் போகையிலே
தடம் மறிக்கப் பிள்ளையில்லை
மழை பெய்த வாசலிலே
மைந்தனடி காணேனே
மைந்தனடி காணேனே - நான்
மறுகி அழுகுகின்றேன்

-என்பது ஒரு மலடியின் சோகப்பாடல்.

பெரும்பாலும் மழலைப்பேச்சைச் செவிமடுத்தலுக்கோ குறும்புக்கோ-எதிர்காலத்தில் மகன் தன்னை கவனித்துக்கொள்ளுவான் என்பதற்காகவோ குழந்தை வேண்டும் என்ற ஆதங்கத்தை இப்பாடல்கள் வெளிப்படுத்தினாலும், நாட்டார் வழக்காற்றுகள் வேறுவிதமாயும் பதிவுசெய்துள்ளன.

இருளி இருளி என்று ஓதுவா - அம்மா
கொண்டையிலே பூ வச்சா
மலடிக்குப் பூ எதுக்கு என்பா
முத்தாரம்மன் கோவிலிலே
முன்னே போய் நின்னாக்க
மூளி மலடி விலகி நில்லுன்னு - அம்மா
மொறச்சி பேசி ஏசுவாக

என்ற பாடல் சமூகத்தின் தாக்குதலைத் தாங்கமுடியாத மலடியின் ஏக்கத்தைக் குறிப்பது. பெண்ணுக்கு மரியாதையைக் குழந்தைபேறுதான் கொடுக்கும் என்பது நாட்டார் வழக்காறு. குழந்தையில்லா பெண் விதவையைப் போல் நடத்தப்படுவாள்; சுபகாரியங்களில் ஒதுக்கிவைக்கப்படுவாள். இதை எதிர்கொள்ளுவது சவாலான காரியம். ஒருவகையில் விதவைகளைவிட மலடிகள்தாம் குத்தல் பேச்சுக்களால் அதிகம் தாக்கப்படுவர்.

குழந்தை இல்லாமைக்கு பெண்ணை மட்டுமே குற்றம் சாட்டுவது என்பது நடைமுறை. வாரிசை உருவாக்குவதற்கான வழிமுறைகள் பல்வேறு சமூங்களில் பரமரகசியமாகவே பேசப்பட்டிருக்கின்றன. நாட்டார் வழக்காற்றில் தொகுக்கப்படாத பகுதி இது. மகாபாரத காலத்திலிருந்தே வரும் வழக்கம் இது. குருகுல முன்னோர் விசித்திரவீரியனின் மனைவிகள் அம்பிகை, அம்பாலிகை. விசித்திரவீரியன் காசநோயால் வருந்தி இறந்தான். அவனுக்குச் சந்தான பாக்கியம் இல்லை. குலத்துக்கு மூத்தவளான

  • சத்தியவதி மகன் முறையில் உள்ள பிதாமகனான பீஷ்மரிடம் “இந்த இரண்டு பெண்களையும் புணர்ந்து வம்சவிருத்தி செய்ய வேண்டும்; இது தர்மம்” என்கிறாள்.

பீஷ்மன் “அம்மா பரதவம்ச சந்தான விருத்திக்கு நீங்கள் கூறும் வழி நியாயமானது. ஆனால் நான் ஏற்கெனவே செளின்துள்ள பிரக்ஞைக்கு இது தடை; அதனால் நல்ல குணவான பிராமணனை உபசரித்து அந்தப் பெண்களுடன் பிரஜை உற்பத்தி செய்யலாம்” என்று வழிசொல்லுகிறார். பீஷ்மரின் ஆலோசனைப்படி வியாசரை வேண்டுகிறாள் சத்தியவதி. வியாசர் அம்பிகை அம்பாலிகைக்கு சந்தான பாக்கியம் அளிக்க இணங்குகிறார். அதனால் திருதராஷ்டிரன், பாண்டு என்னும் இரு மக்கள் பிறக்கின்றனர். பாண்டு இறந்த பின்புதான் குந்தியும், மாத்ரியும் ஐந்து தேவர்களுடன் கலந்து ஐவரைப் பெறுகின்றனர். இதனால் ஐவரைப் பாண்டுமக்கள் என எப்படிக் கூறலாம் என்ற கேள்வி, பாரதப் போர் ஆலோசனைக் கூட்டத்தில் எழுகிறது.

வம்சம் அற்றுவிடாமல் இருக்க பிற ஆடவனைப் புணர்தல் என்பதை தர்மமாகப் பார்த்தல் என்ற மரபு செம்மொழிக் காவியபுராணங்களில் மட்டுமல்ல, நாட்டார் மரபிலும் உண்டு. வட்டார ரீதியான இச்செயல்பாடு பெரும்பாலும் விழா / சடங்கு தொடர்பாக இணைக்கப்பட்டுள்ளது. மகப்பேறில்லாத பெண்ணைத் திருவிழாக்களுக்கு அழைத்துச்செல்வது; திருவிழாக் கூட்டத்தில் ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்து அப்பெண்ணை அவனுடன் அனுப்புவது என்ற வழக்கம் தென்மாவட்டங்களில் சில ஊர்களில் இருந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கும்மரெட்டியாபுரம் கிராமத்தில் மாசி மாதம் நடக்கும் தட்டைக்காட்டுத் திருவிழாவில், பெண் தான் விரும்பிய ஆணை அழைத்துக்கொண்டு சோளத்தட்டைப் பயிருக்குள் சென்று உடலுறவு கொள்ளலாம் என்ற வழக்கம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்திருக்கிறது. (ஆ. சிவசுப்பிரமணியன், மந்திரமும் சடங்குகளும், 2010, ப.64)

பண்டைய தென்திருவிதாங்கூரான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்கக் கோவில் விழாவிலும், பிரபலமான இந்துக் கோவில் ஒன்றின் குறிப்பிட்ட விழாவிலும் மகப்பேறில்லாத பெண்ணை முதிய பெண் ஒருத்தி அழைத்துச் சென்று தகுதியான ஆணைத் தேடிக் கூடவைப்பது என்ற வழக்கம் இருந்தது பற்றிய வாய்மொழித் தகவல்கள் உண்டு.

தென்குமரிக் கடற்கரையில் சோழக்காற்று வீசும் காலத்தில் கன்னிப்பெண்கள் செல்லக்கூடாது என்றும் அப்படி மீறிப்போனால் அவள் கர்ப்பமாவாள் என்ற நம்பிக்கை உண்டு. இது தொடர்பாக புருஷாதேவி கனகப்பாடல் உள்ளது. மதுரை சித்திரை பௌர்ணமி விழாவில் குறிப்பிட்ட சமூகத்தினர் குழந்தைப்பேறு வேண்டி அந்த சமூகம் ஆண்களுடனேயே தெரிந்து உறவுகொள்வது என்ற நடைமுறை இருந்தது. கிராமத்துத் திருவிழாவில் மட்டும் கலாச்சாரக் கட்டமைப்பு குலைவது, பிரிந்த உறவுகள் சேருவது என்னும் செயல்பாடுகள் காலங்காலமாய் இருந்து வந்திருக்கிறது.

இப்படியான ஒரு செய்தியை மையமாக வைத்தது ‘மாதொருபாகன்’ நாவல். கள் சாராயத்தை ஒழிக்க முன்வந்த சேலத்து வக்கீல் (இராஜாஜி) முதல்மந்திரியாக இருந்த காலத்தில் நடக்கிறது இந்த நாவலின் கதை. உத்தேசமாய் இன்றிலிருந்து 75 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருச்செங்கோட்டில் நடக்கும் கதை இது. நகரச்சார்பு முழுதும் இல்லாத கிராமத்தின் கவுண்டர் சாதி பின்னணியில் நடப்பது. குழந்தைப்பேறு இல்லாத பொன்னாளும் காளியும் தங்கள் குறைகளைப் பற்றி மீண்டும் மீண்டும் சொல்வதும் நினைப்பதும் இவர்களைச் சுற்றியுள்ள மக்களின் தாக்குதல்கள் மகப்பேற்றுக்காக தெய்வ வேண்டுதல், மருந்து குடித்தல் என பொன்னா அலைவதும் ஆன நிகழ்ச்சிகளுடன் நாவல் நகர்ந்துகொண்டு போகிறது.

பொன்னாவுக்கு எப்படியாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்மனதில் ஊறியிருக்கிறது. குழந்தைக்காக அவன் வேறு ஒருத்தியை மணம் செய்வதும் அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கும் அவள் தனக்குச் சொந்தமானவள் என்று உள்மனசு சொல்லிக்கொள்கிறது. அவன் அதைத் தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கிறான். இதற்கு மரபுவழி சார்ந்த ஒருத்தன் ஒருத்தி கற்பு போன்ற தத்துவார்த்தங்கள் காரணம் அல்ல. காளியைவிடப் பொன்னாளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கனவாய்ப் பெருகிக்கொண்டு போகிறது. எல்லோரும் ஒத்துக்கொண்ட ஒரு வழக்கத்தை காளியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. திருச்செங்கோட்டுத் திருவிழாவில் தன் வம்சவிருத்திக்கு ஒரு ஆணைத் தேடிக்கொள்வது தர்மமாகத்தான் பொன்னாளின் மாமியாருக்கும் படுகிறது. அந்த ஆண் தெய்வீக வம்சம் என்ற வழக்காற்றுப் புனைவில்கூட அந்தச் செயலை நியாயப்படுத்துவதற்கு ஒரு காரியம்.

காளிக்கு குழந்தைப் பிரச்சினையைவிட பொன்னா தனக்கு உரியவள் என்று உரிமை கொண்டாடுவது பிடித்திருக்கிறது. அவளும் அவனுக்கு ஆத்மார்த்தமாகத்தான் இருக்கிறாள். ஆனால் காலங்காலமாய் உள்ள வழக்கத்தை அவள் தவறாய் நினைக்கவில்லை. கணவனை இழந்த அம்பிகை அம்பாலிகை வம்சவிருத்திக்காக செய்த தர்மத்தைப் பாண்டுவின் அனுமதி பெற்றுக்கொண்டு குந்தியும் மாத்ரியும் ஐந்து தேவர்களைக் கலந்து குழந்தைகளைப் பெற்ற தர்மத்தைத்தான் திருச்செங்கோட்டு விழாவில் ஒரு ஆணைக் கூடுவது என்று அவள் நினைக்கிறாள். பொன்னாளுக்கு பழைய பாரத கதை வழக்கமெல்லாம் தெரியாது. ஆனால் செயல் மட்டும் நியாயமாகப் படுகிறது. பொன்னாவும் மற்றவர்களும் குழந்தைப்பேற்றுக்கு திருவிழா செல்வதும் அங்கு சாமியைத் தேடுவதும் (அது காமவெறியில்லாத தேடுதல்) ஆன தெய்வீகப் பூச்சு, பொய் என்பது தேவடியாள் ஒருத்தியின் பேச்சில் வெளிப்படுகிறது. “தேவடியாக் குடியில் நம்மளை எவன் பார்க்கிறான்; எல்லாப் பொம்பளைகளும்

இன்றைக்குத் தேவடியாத்தான்” என்று சொல்லுகிறாள் ஒருத்தி (ப. 87). அப்படியானால் இது அப்போது முழுதும் அங்கீகரிக்கப்படவில்லையா?

தென்குமரிப் பகுதியில் “திருவிழாவில் தரிச்ச பிள்ளை”; “திருவிழாவுக்குப் பெத்துப்போட்டது” என்று பேசப்பட்ட வழக்காறுகளின் அர்த்தமே சமூகம் அதை ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான். காளியின் ஆவேசத்துக்கும் ஆதங்கத்துக்கும் இதுவா காரணம்? தத்தெடுத்த பிள்ளைகூட யாருக்கோ பிறந்த பிள்ளை என்று கூறும் வசையோடு இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இனவரைவியல் படைப்பு என்று முத்திரை குத்தப்பட்ட நாவல்களில் உள்ள விவரணைகளும் பிரமிப்பூட்டும் சுவையான நாட்டார் வழக்காற்று தகவல்களும் இந்த நாவலில் பெருமளவில் இடம்பிடிக்கவில்லை. நகரத்து வாசகனை கிராமத்து மண்வாசனை அறியாத வாசகனை அதிசயிக்கச் செய்யும் தகவல்கள் இதில் இல்லாதது ஒரு சிறப்பு என்றுகூட தோன்றுகிறது. இப்படிப்பட்ட நாட்டார் வழக்காற்றுச் செய்திகளைத் தொகுக்கும் வேலையை அந்த ஆய்வாளர் செய்துகொள்ளுவார்கள். பெருமாள்முருகன் இதில் கவனமாக இருக்கிறார். காலத்தைப் பதிவுசெய்யும் விவரணைகளையும் நிகழ்ச்சிகளையும் அடுக்கிக்கொண்டே போவது என்ற இனவரைவியல் தாக்கம் பெருமாள்முருகனிடம் இல்லை என்பதே இவரின் தகுதி.

உயிர் எழுத்து, ஜூலை 2011