மாதொருபாகன் பிரச்சினை: ஒரு அரசியல் வாசிப்பு

ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம்தேதி: 2015-02-01மூலம்: காலச்சுவடு

மாதொருபாகன் பிரச்சினை: ஒரு அரசியல் வாசிப்பு

ஆசிரியர்: ஸ்டாலின் ராஜாங்கம்

மாதொருபாகன் பிரச்சினை: ஒரு அரசியல் வாசிப்பு ஸ்டாலின் ராஜாங்கம் மாதொருபாகன்’ நாவல் பற்றியும் பெருமாள்முருகன் எதிர்ப்பு பற்றியும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் பேசுவது ஒருபுறமிருக்க, இத்தகைய எதிர்மறைச் சூழல் எவ்வாறு உருவானது, அவற்றின் வேர்கள் எவை என்றெல்லாம் பேசிப்பார்ப்பது மறுபுறமாக அவசியப்படுகிறது. ஆனால் இவ்வாறான தேடலின் போது சந்திக்க நேரும் கசப்பான உண்மைகளும் பிரச்சனையின் விளைவுகளும் நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. ஆரம்பத்தில் இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பு என்றறியப்பட்ட இப்போராட்டம், ச £ தி ய ¬ ம ப் பு க ளி ன் ப ல த் தி « ல « ய நிலைகொண்டிருக்கிறது என்பதை அறிந்தபோது அதை விளங்கிக் கொள்வதற்கு நம்மிடம் போதிய உபகரணங்கள் இல்லாமல் போய்விட்டன. இப்போதாமை சாதிகளின் ஓட்டுகளை நம்பியிருக்க வேண்டிய கட்சிகளை மட்டுமல்ல, மாறிவரும் சூழல்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளாமல் மதநம்பிக்கையைப் போன்று கருத்தியல்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் தமிழ் அறிவுஜீவிகளையும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது. தங்களுக்கு உகந்த முறையில் எளிமைப்படுத்தியோ மௌனமாகவோ மாதொருபாகன்: ஸ்235 முற்றிலும் வேறொன்றைப் பேசுவதாகப் பாவனை செய்தோ இத்தகைய நெருக்கடியிலிருந்து விலக எத்தனிப்போரும் இங்குண்டு. திருச்செங்கோடு என்கிற ஊர் எதார்த்தத்திலிருந்து பிரச்சனையை ஆராயாமல் எழுத்துலகம் சார்ந்து தாங்களாகக் கற்பிதம் செய்து கொண்டிருக்கும் எதிர்வின் அடிப்படையில் வெளியிலிருந்து பேசவே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது பிரச்சனையைப் புரிந்து கொள்வதற்கு உதவப்போவதில்லை. இன்றைய அசாதாரண சூழல் நம் அறிவுஜீவிகளின் சொந்த எதிர்வுகளை விடவும் ஆழமானது. மதவாத அரசியலும் சாதி உணர்ச்சியும் இங்கு கைகோத்துச் செயற்படுகின்றன. ஆனால் இப்பிரச்சனையைப் பற்றிப் பேச வரும் பிராமண அறிவுஜீவிகள் இவற்றைச் சாதியின் பக்கம் தள்ளுகிறார்கள். பிராமணரல்லாத அறிவுஜீவிகள் இதனை மதவாதத்தின் தந்திரமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றின் பலத்தில் மற்றொன்று மறுஉறுதி பெற்றிருக்கிறது என்பதே உண்மை. மதவாதத்தின் நுட்பமான கண்ணி ஊரின் சாதிநலனில் கட்டப்பட்டிருக்கிறது. இன்றைய மதம் என்கிற நிறுவனம் அரசியல் வயப்பட்டது; தேசம் தழுவியது. ஆனால் ஒருவனுக்கு நேரடியான அடையாளத்தைத் தருவது ஊரின் சாதியப் பண்பாடுதான். அரசியல்வயப்பட்ட புதிய மதமும் கலாச்சார வயப்பட்ட பாரம்பரிய சாதியும் நவீன அரசுகளாலும் மேற்கத்தியச் சிந்தனைச் சட்டகத்தின் வரையறையினாலும் ஒன்றாக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக இன்றைக்குச் சாதியைத் தொடுவதும் மதத்தைத் தொடுவதும் ஒன்றாகவே பார்க்கப்படுகின்றன. பெருமாள்முருகனுக்கு எதிரான பிரச்சனையை ஊர் மக்கள் உருவாக்கவில்லை என்பதும் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்பதும் உண்மை. ஆனால் மதத் திரட்சிக்காக ஊர் மக்களின் சாதி உணர்ச்சி பயன்படுத்தப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இம்மக்களிடம் சாதி இல்லையென்றோ அவற்றோடு இணைக்கப்பட்டுவிட்ட மத உணர்ச்சி மேலெழாது என்றோ கூறுவதற்கு நம்மிடம் எந்த நியாயமும் இல்லை. இவ்விடத்தில்தான் இன்றைய சமூக அதிகாரத் தளத்தில் மதமும் சாதியும் பிரித்தறிய முடியாத அளவிற்கு இணக்கம் கொண்டிருக்கின்றன என்பதை அறிய வேண்டியுள்ளது. இன்றைய மதப் பெரும்பான்மைவாதம் எதிர்க்கப்பட வேண்டுமென்பதில் அய்யமில்லை. ஆனால் மதப் பெரும்பான்மைவாதத்தின் வேர்களும் பரிமாணங்களும் எவ்வாறிருக்கின்றன என்பதை விரிவாக ஆராயாமல் இவற்றை எதிர்கொள்ள முடியாது. மதப் பெரும்பான்மைவாதத்தின் வேர்களைத் தேடிச் சென்றால் வட்டாரரீதியான சாதிப் பெரும்பான்மைவாதத்தில் முடிவதைப் பார்க்க முடிகிறது. தங்களின் அதிகாரம், அதற்கான வன்முறை ஆகியவற்றிற்கான பலத்தைப் பகுதிசார்ந்த எண்ணிக்கை பெரும்பான்மைச் சாதிகளின் துணை இல்லாமல் மதப் பெரும்பான்மைவாதம் உருவாவதில்லை. ஏனெனில் அந்தந்தப் பகுதிகளின் சமூக ஆதிக்கம், அதற்கான வன்முறை ஆகியவற்றைத் தொடர்ந்து கைக்கொண்டிருந்தவை என்கிற முறையில் இச்சாதிகளே மதவாத அரசியலுக்குத் துணை புரிகின்றன. இன்றைக்கு ஒரு கட்சி, அதிகாரம் என்கிற முறையில் இந்து அமைப்புகளில் பல்வேறு சாதியினரும் சேருகின்றனர். அக்கட்சிகளுக்கும் இது தேவைப்படுகிறது. ஆனால் இன்றைக்கு எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகளாக இருப்பது அந்தந்தப் பகுதிகளின் பெரும்பான்மைச் சாதியினரே ஆவார். ஆதிக்கச் சாதியாக விளங்கிவந்த தொடர்ச்சியில் இச்சாதிகளின் திரட்சியும்கூட இயல்பாகவே தங்களை மதப் பெரும்பான்மைவாதத்தின் பக்கம் இணைத்து இனம் காணத் தொடங்கிவிடுகின்றன. தமிழகத்தில் எந்தப் பெரும்பான்மைச் சாதியிடமிருந்தும் அவர்களை முற்போக்கான திசை நோக்கி இட்டுச் செல்ல கடந்தகாலத் தலைமைகளும் அரசியல் பிம்பங்களும் உருவாகவில்லை. பெரியார் செயற்பட்ட காலத்தில் எந்தப் பெரும்பான்மை சாதியும் அவரின் தாக்கத்தைப் பெறவில்லை. திராவிட இயக்கத்தினால் உருவான அதிகார நலன்களை உள்வாங்கிக் கொண்ட பிராமணரல்லாத பெரும்பான்மைச் சாதிகளிடம் நவீன அரசியல் மனநிலை உரிய அளவில் வினையாற்றவில்லை. பெரியார் இருந்தபோதும் இறந்த பின்னரும் அவரின் இயக்கச் செயற்பாடுகளில் எந்தப் பங்களிப்பையும் வழங்கியிராத சில வட்டாரச் சாதிகள் தற்கால அரசியல் நலனுக்காக இன்றைய அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அதேவேளையில் சமூக அதிகாரத்திற்காக ஊரின் பாரம்பரியச் சாதி அதிகாரத்தையும் விடாமல் காத்து வருகின்றன. வட்டாரச் சாதிகளின் மதவாத ஆதரவைப் பிராமணியத்தின் தந்திரம் என்று மட்டுமே பழையபடி விளக்கித் தப்பிவிட முடியாது. இவ்வாறு சொல்வது ஒருவகையில் சாதியத்தை உரிய தளத்தில் வைத்துப் புரிந்து கொள்வதைத் தடுத்துவிடுகிறது. பிரச்சனையின் வேர் நாம் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் ஆழமானது, நுட்பமானது. மதத்தின் ஆசியில்தான் சாதி இயங்குகிறது என்ற இதுவரையிலான புரிதலை சாதிசார்ந்த உணர்ச்சியிலிருந்தே மத அடையாளத்திற்கான கூறுகள் சேகரிக்கப்படுகின்றன என்று மாதொருபாகன்: ஸ்237 மாற்றிப் பார்க்க வேண்டும். இதற்கு பல்வேறு உதாரணங்களைத் தர முடியும் என்றாலும் பெருமாள்முருகன் பிரச்சனை உடனடி உதாரணம். இப்பிரச்சனையில் சாதி இருக்கிறது என்று கண்டுகொண்டதை விடவும் அது எவ்வாறு மதத்தோடு இணைகிறது, இணைந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே முக்கியமானது. ஆனால் சாதியை அதற்குரிய அளவில் முக்கியத்துவம் தந்து ஆராய பிராமணியத்தை மட்டுமே மதவாதமாகக் கருதும் நம்முடைய ஒற்றைப் பிராமணரல்லாத கருத்தியல் மட்டுமே போதாது. அது பிரச்சனையை மத இந்துக்களான பிராமணர்களுக்குரியதாக ஆக்கிவிட்டு சாதி இந்துக்களை காப்பாற்றிவிடுகிறது. மதமும் சாதியும் சமநலன்கள் அடிப்படையில் நடத்திக்கொள்கிற கொள்வினை கொடுப்பினையே இன்றைய இந்துத்துவம் அல்லது மதப் பெரும்பான்மைவாதம். சாதியமைப்பு தனக்கான நலனை அறிந்தே மதச் சட்டகத்திற்குள் இயங்குகிறது. சாதிகளுக்கு அதிகாரப் பலனை அளிப்பதன் மூலமே இருப்பைத் தக்கவைக்க முடியும் என்ற எதார்த்தத்தை மதவாதமும் புரிந்து கொண்டிருக்கிறது. இதன் படி சாதிப் பெரும்பான்மைவாதம் மதப் பெரும்பான்மைவாதத்தால் தார்மீகரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மோடி தொடங்கி இந்தியாவின் இன்றைய அதிகார மையங்களை இவ்வாறு பட்டியலிட முடியும். இடைநிலை ஆதிக்கசாதிகள் மதவாதத்தின் பக்கம் சேருவதின் காரணங்கள் எவையென்று அண்மை நேர்காணல் ஒன்றில் விளக்கிச் செல்லும் காஞ்சா அய்லய்யா இன்றைய மதவாத அரசியலோடு இச்சாதிகள் இணைந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறார் என்பது இங்கு எடுத்துக் காட்டத்தக்க உதாரணமாகும். தமிழகத்தில் இந்தமுறை பாஜகவின் தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிராமண சாதியைச் சேர்ந்தவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிராமணரல்லாத வட்டார சாதிப் பிரதிநிதி தலைமைக்கு வந்திருப்பது என்பதே சாதிப் பெரும்பான்மைவாதத்தின் பலத்தைக் காட்டுகிறது. ஆனால் இன்றைய மதப் பெரும்பான்மைவாத எதிர்ப்புச் சொல்லாடல்களில் இத்தகைய புரிதல் இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. அறிவுஜீவி சமூகம் தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் அரசியல் தளம்மீது எந்த நெருக்கடிகளையும் உருவாக்குவதில்லை. மதச்சார்பு பேசும் இன்றைய அரசியலின் மற்றுமொரு பகுதியாக மதச்சார்பின்மை பேசுவது அரசியல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில்மாற்றுத் தரப்பின் பேரளவு அரசியல் சொல்லாடலாகவும் இது மாறியிருக்கிறது. தங்களை முற்போக்காகக் காட்டிக் கொள்ள விரும்பும் கட்சிகளின், அறிவுஜீவிகளின் கேடயமாகவும் இச்சொல்லாடல் மாறிவிட்டது. எனவே இச்சொல்லாடலை உரியதளத்தில் வைத்துப் பொருத்திப் பேச வேண்டும். பழைய பொருளில் மதச்சார்பின்மை பேசுவது எளிது. அதனால்தான் சாதிப் பெரும்பான்மைவாதம் பேசும் பாமக கூட கடந்த காலத்தில் மதவாத எதிர்ப்பு பேசியதோடு மதவாத ஆட்சியிலும் இடம்பெற முடிந்தது. நாம் பிரச்சனையைப் பொதுவாகப் பேசுவதிலிருந்து முன்னேவந்து குறிப்பாகப் பேசியாக வேண்டும். சாதி எதிர்ப்பை உள்ளீடாகக் கொண்ட மதப் பெரும்பான்மைவாத எதிர்ப்புச் சொல்லாடல் தேவை. இதனால் நிலைமை கூடுதலாகச் சிக்கலாகக் கூடும். ஏனெனில் முற்போக்கான கட்சிகளாகச் சொல்லப்பட்டுவரும் அமைப்புகளேகூட இதனால் காணாமல்போய் மதவாத எதிர்ப்பின் பலம் குன்றக் கூடும். எனில், ஒன்றின் குறைபாட்டை நிறைவு செய்ய மற்றொரு குறைபாட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் நீதியா என்கிற கேள்வியையும் நாம் இத்தருணத்தில் எழுப்பித்தான் ஆக வேண்டும். இது பெருமாள்முருகன் என்ற படைப்பாளி சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, இன்றைய சூழலின் அபாயம் சம்பந்தமான பிரச்சனையும் கூட. இதன் வெளிச்சத்தில் கருத்துரிமை என்கிற அம்சத்தையும் நாம் அடுத்தக் கட்டம் நோக்கி நகர்த்த முடியும். காலச்சுவடு பிப்ரவரி, 2015