மாதொருபாகன்: மையத்தைச் சிதைக்கும் வாசிப்பரசியல்
ஆசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்
மாதொருபாகன்: மையத்தைச் சிதைக்கும் வாசிப்பரசியல் சுப்பிரமணி இரமேஷ் பெருமாள்முருகன் தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சார்ந்தவர். இயல்பில் இவர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். கொங்கு வட்டார எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரத்திற்குப் பிறகு அப்பகுதி நிலவரைவியல் குறித்து காத்திரமாக எழுதி வருபவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, அகராதி, பதிப்பு, தொகுப்பு என புனைவு மற்றும் அபுனைவு சார்ந்து பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர். தன்னுடைய எழுத்துப்பணிக்காக இதுவரை பதினோரு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெருமாள்முருகன் இதுவரை ஒன்பது நாவல்களை எழுதியுள்ளார். இந்த ஒன்பது நாவல்களின் 2010ஆம் ஆண்டு எழுதிய ஐந்தாவது நாவலான ‘மாதொருபாகன்’ பெருமாள்முருகனுக்கு உலக அளவில் ஒரு பெரும் அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வாசிக்கத் தவறிய பலரும் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருக்கின்றனர்; ஏற்கனவே வாசித்தவர்கள் மீள்வாசிப்பு செய்துகொண்டிருக்கின்றனர். ‘மாதொருபாகன்’ இந்த நான்கு ஆண்டுகளில் நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது. அப்பொழுதெல்லாம் கண்டுகொள்ளப்படாத மாதொருபாகன்: ஸ்215 இந்நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்குப் பிறகு அப்பகுதியைச் சார்ந்த குறிப்பிட்டச் சமூகத்தினரால் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இந்நாவலின் கதை இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாகவும் அப்பகுதியைச் சார்ந்த குறிப்பிட்ட சமூகப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் கூறி, தங்களது தொடர் போராட்டத்தின் மூலம் பெருமாள்முருகனை அவரது சொந்த நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றி வெற்றி கண்டிருக்கின்றனர். ‘எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்து விட்டான். அவன் கடவுள அல்ல; ஆகவே உயிர்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்’ என இறுதி அறிக்கை விடவைத்தனர். ‘மாதொருபாகன்’ இனக்குழுச் சமூகத்தின் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படும் ஒரு சடங்கு, திருச்செங்கோடு பகுதியில் தொடர்ந்திருக்கிறது என்பதை முன்வைக்கிறது. நாவல் வெளிவந்து நான்கு ஆண்டுகள் கழித்து அரசியலாக்கப்பட்டிருப்பதற்கு எழுத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் பல கற்பிதங்களை முன்வைக்கின்றனர். இதற்கு வெளிப்படையாகப் பதில் சொல்லமுடியாதவர்கள் தங்களது போராட்டத்திற்கு மலிவான அரசியல் தந்திரங்களைப் பின்தொடர்கின்றனர். இந்நாவலின் கதையை எளிமையாகச் சொல்லிவிடலாம். காளி தன்னுடைய நண்பனான முத்துவின் தங்கை பொன்னாவைத் திருமணம் செய்துகொள்கிறான். இவர்களுக்குப் பன்னிரண்டு வருடங்களாகக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. பொன்னாவும் காளியும் எல்லா கடவுளிடமும் முறையிடுகிறார்கள். அப்பகுதியில் கடைபிடிக்கப்படும் கடினமான குழந்தைபேற்றுக்கான சடங்குகளனைத்தையும் செய்து முடிக்கின்றனர். பொன்னா விதவிதமான தழைகளைத் தின்னுகிறாள். ‘ஆண்டவனே, இந்த மாசமாச்சும் என் வவுத்த அடச்சிரு’ என்று இரங்குகிறாள். ‘கேக்கற நாய்களுக்குப் பதில் சொல்லி முடியல’ என்று ஆற்றாமை கொள்கிறாள். ஆனாலும் ஒவ்வொரு மாதமும் அவர்களது ஆசை நிராசையோடே கழிகிறது. இதனால் இருவரும் கடும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றனர். காளி வைத்த பூவரசு மரம் பூக்கிறது; காய்க்கிறது. பொன்னா தாய்வீட்டிலிருந்து ஓட்டிவந்த கிடாரி ஏழெட்டுமுறை ஈன்றுவிட்டது. தங்களோடு புழங்கும் சக உயிரினங்களுடன் தங்களது நிலையை ஒப்பிட்டு கழிவிரக்கம் கொள்கின்றனர். இந்நிலையில் காளிக்கு இரண்டாம் திருமணம் செய்ய அவனுடைய அம்மா தொடர்ந்து முயற்சி செய்கிறாள்; பொன்னா எதிர்க்கிறாள். காளியும் பொன்னாவின் மீதுகொண்ட அன்பின் காரணமாகவும் இரண்டாவதாகத் திருமணம் செய்தவளுக்கும் ஒருவேளை குழந்தைப் பிறக்கவில்லை என்றால் தன்னுடைய ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற காரணத்திற்காகவும் மறுக்கிறான். பொன்னாவும் காளியும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இச்சமூகத்தால் குழந்தை இன்மைக்காக அவமானப்படுத்தப்படுகின்றனர். காளியை ‘வறடன்’ என்றும் பொன்னாவை ‘வறடி’ என்றும் அழைத்து ஆனந்தமடைகிறது இன்று நாவலுக்கெதிராகப் போராடும் அச்சமூகம். காளியின் அம்மாவும் பொன்னாவின் அம்மாவும் இறுதியில் ஒரு முடிவுக்கு வருகின்றனர். திருச்செங்கோட்டில் நடைபெறும் பதினான்காம்நாள் திருவிழாவிற்குப் பொன்னாவை அனுப்ப முயற்சி மேற்கொள்கின்றனர். இத்திருவிழாவில் உச்சத்தில் வரைமுறைகள் எல்லாம் தகர்ந்து போகும். அந்த இரவில் இணங்கும் எந்த ஆணும் பெண்ணும் உறவு கொள்ளலாம். இருள் எல்லா முகங்களுக்கும் திரை போட்டு விடுகிறது. ஆதி மனிதன் இந்தத் திருவிழாக் கொண்டாட்டத்தில் உயிர்ப்பெறுகிறான். திருமணமான முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை எங்கும் காணலாம். ஒவ்வொரு பெண்ணும் தனக்குப் பிள்ளைவரம் கொடுக்கும் முகம்தெரியாத சாமியைத் தேடிக்கொண்டிருப்பார்கள். காளியும் முத்துவும்கூட சில வருடங்களுக்கு முன்பு சில பெண்களுக்குச் சாமியாக இருந்திருக்கின்றனர். ஒருநாள் காளியின் அம்மாவே இதற்குக் காளியிடம் இசைவு கோருகிறாள். காளி உடன்பட மறுக்கிறான்; ஆனாலும் முத்துவின் மூலமாகக் காளியை ஏமாற்றி பொன்னாவை அந்தத் திருவிழாவிற்கு அழைத்துச் செல்கின்றனர். பொன்னா, அனைத்தும் காளியின் உடன்பாட்டோடுதான் நடைபெறுவதாக எண்ணுகிறாள். காளி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறான். மாதொருபாகனை ஏனைய நாவல்களைப் போல வாசித்துவிட்டு எளிதில் கடந்துவிட முடியாது. இந்நாவல் வெளிப்படையாகச் திருச்செங்கோட்டில் வழக்கத்திலிருந்த ஒரு சடங்கு குறித்து விவாதிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் நாவலின் கதையாடல்கள் வழியாக இரண்டு முக்கியமான விடயங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, அப்பகுதியில் வாழும் நிலவுடைமைச் சமூகத்தினரால் பின்பற்றப்படும் சாதிய அரசியல்; மற்றொன்று, பெண்களை உற்பத்திப் பொருளாகப் பார்க்கும் நுகர்வுக் கலாச்சார மனப்பான்மை. இந்நாவலுக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள் வசதியாக இந்த இந்த இரண்டு விடங்களையும் மறந்து விடுகின்றனர். பொன்னா பதினான்காம்நாள் திருவிழாவில் நடைபெறும் சடங்கில் கலந்துகொள்ள வேண்டியதன் நெருக்கடியை உருவாக்கியது தங்களது முன்னோர்கள் என்ற மாதொருபாகன்: ஸ்217 வாசிப்பை அடைவதற்கு நாவலில் எந்தத் தடையையும் பெருமாள்முருகன் ஏற்படுத்தி வைத்திருக்கவில்லை. குழந்தை இல்லை என்ற ஒரு காரணத்திற்காக அவளது பெண்மை எந்த வகைகளில் எல்லாம் களங்கப்படுத்தப்படுகிறது என்பதை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ‘சில மாடுங்க இப்படித்தான் மாப்ள. எத்தன மொற போட்டாலும் செனையாகித் தொலைக்காது. பேசாம மாட்ட மாத்திப்புடுங்க’ என்று மாட்டுத் தரகர் செல்லப்பக் கவுண்டர் சாடை பேசுகிறார். « ந £ ன் பு ச் சீ ர் வ £ ங் கு வ த ற் கு ரி ய த கு தி ய £ க வு ம் குழந்தைப்பேறு நிர்ணயிக்கப்படுகிறது. ‘அது ஒன்னுதான் கொறையாக் கெடக்குது. கையில் ஒன்னு இடுப்புல ஒன்னு வவுத்துல ஒன்னுன்னு இருந்தனா, ‘குடுடா தாயோலிவளா’ன்னு எங்கப்பனையும் அண்ணனையும் கழுத்துல துண்டப் போட்டுக் கேப்பன்’ என்று பதிலுரைக்கிறாள் பொன்னா. ‘எனக்குக் கொழந்த இருந்தா இருக்குது, இல்லாட்டிப் போவுது. உனக்கென்னடா மயிரு. மூடிக்கிட்டுப் போ’ என்று கத்திச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. ‘பிள்ள பெத்திருந்தான்னா அரும தெரியும். பையன் மண்ட ஒடஞ்சு ரத்தம் கொட்டற அளவுக்கு உட்ருக்கிறா. பிள்ள பெத்த எந்தப் பொம்பளயாச்சும் இப்பிடி உடுவாளா?’ ‘நேரத்தோட வரச்சொல்லி அவ்வளவு சொல்லியும் இப்ப வர்ற. பிள்ள குட்டிவளச் சீவிச் சிங்காரிச்சிக் கூட்டிக்கிட்டு வர இவ்வளவு நேரமாயிருச்சா?’ ‘முட்டுச் சந்துல நிக்கற கல்லுன்னு என்னய நெனச்சு எந்த நாய் வேண்ணாலும் வந்து மண்டுட்டுப் போலாம்னு நெனைக்குதுவ மாமா.’ ‘நீ அந்தப் பக்கம் தள்ளியிரு’ என்ற தாய்மாமன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்துப் பின்னால் விட்டாள். பிள்ளை பெறாதவள் சோறு சுற்றினால் அந்தப் பெண்ணுக்குமா குழந்தை இல்லாமல் போய்விடும்?’ ‘வறடி பருப்பள்ளிக்கிட்டு ஓடி ஓடிக் குடுக்கறா. அவ கையால தொட்ட பருப்பு எங்கிருந்து மொளைக்கும்?’ என்று யாரோ சொல்லிவிட்டார்கள். ‘கொழந்த பெத்து வளத்திருந்தா அரும தெரியும். என்னமோ நாறுது நாறுதுன்னு மொழங்குற?’ என்றாள். ‘பிள்ளையில்லாதவ பீச்சீலய மோந்து பாத்தாளாம்னு செலவாந்தரம் சொல்லும். கொழந்த பீயப் பாத்து மூஞ்சியச் சுழிக்கறவளுக்குப் பொறக்கவா போகுது?’ ‘அந்த வறடன் எங்கருந்தோ இதுவளப் புடுச்சாந்து வெச்சிருக்கறான். கட்டுன ஒன்னே கொறங்காடாக் கெடக்குது. கொண்டாந்து வெச்ச இத என்ன பண்ணப் போறானோ?’ ‘அடப்போ. பிள்ளை இல்லாத சொத்துக்கு இந்த ஆட்டம் ஆடற.’ பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடலில் பாதியைக் கொடுத்த மாதொருபாகனை வணங்கும் அச்சமூகம், பொதுவெளியில் குழந்தைப்பேறு இல்லாத ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் பட்டம்தான் ‘வறடி’. தான் பங்கேற்கும் ஒவ்வொரு பொதுநிகழ்விலும் அவமானப்படுத்தப்படும் ஒருபெண் ஏதாவதொரு தீர்வைத்தேடி செல்லவேண்டிய அகநெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறாள். அதைத்தான் இந்நாவலில் வரும் பொன்னாவும் செய்கிறாள். குழந்தைப்பேறு இல்லாத பெண்ணை யார் வேண்டுமானாலும் எடுத்தாளலாம் என்ற பொதுபுத்தி மனநிலை இச்சமூகத்தைச் சார்ந்த ஆண்களுக்கும் இருக்கிறது. நாவலில் வரும் இதுபோன்ற கதையாடலை நாவலை எதிர்ப்பவர்கள் முன்னெடுக்காததற்கு என்ன காரணம்? இனக்குழுச் சமூகத்தின் ஒருசில எச்சங்களை அப்பகுதியில் வாழும் சமூகம் தக்கவைத்துக்கொண்டுள்ளது என்பதை நிறுவவே, தனக்குக் கிடைத்த வாய்மொழித் தரவுகளைக் கொண்டு இப்புனைவை பெருமாள்முருகன் உருவாக்கியிருக்கிறார். தனக்குரிய ஆடவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் ஒரு குழுவை வழிநடத்திச் செல்லும் வலிமையும் பெண்ணிடம் இருந்திருக்கிறது என்பதை மானிடவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து நிறுவி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இப்புனைவும் உருபெற்றிருக்கிறது. தொல் சமூகத்தில் பெண்கள் மதுவருந்தும் பழக்கம் இருந்திருக்கிறது. இத்தன்மையை இந்நாவலிலும் காணமுடிகிறது. ‘அவளுக்குக் கள் பிடிக்காது. புளித்த ஏப்பம் விட்டால் நான்கு நாளைக்கு நாறும் என்பாள். நாவில் சுள்ளென்று உறைக்கும் சாராயம் அரை டம்பளர் போதும் அவளுக்கு’ என்று காளி கூறுகிறான். மற்றோர் இடத்தில், ‘அம்மாவும் குடிப்பாள் என்றாலும் அவனுக்கு முன்னால் இதுவரை வைத்துக் கொண்டதில்லை’ என்று காளி நினைத்துப் பார்க்கிறான். ‘கள்ளுக் கொஞ்சம் வெச்சிருக்கறன், குடிக்கறியாம்மா?’ என்று காளி அவன் அம்மாவிடம் கேட்கிறான். அவளும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொள்கிறாள். இந்தக் கதையாடலின் மாதொருபாகன்: ஸ்219 மூலம் அச்சமூகத்தைச் சார்ந்த பெண்களும் மதுவருந்துகிறார்கள் என்பது வெளிப்படுகிறது. தாய்வழிச் சமூகத்தில் தாய்தான் தன் குழந்தைகளுக்கு மதுவைப் பங்கிட்டளித்தாள். தற்போது அதில் சிறிய அளவில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எங்கள் சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கு மதுபழக்கம் இல்லை என்பதையும் எங்கள் சமூகத்தைச் சார்ந்தவர்கள் குழந்தைப் பேறில்லாத பெண்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதில்லை என்பதையும் நிறுவுவதற்கு அவர்களுக்கு எந்தத் தரவுகளும் கிடைக்கப்போவதில்லை. ஏனெனில் இந்தப் பிரச்சனை எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்நாவலை வாசிக்கும்போது நுட்பமாகப் புலப்படக்கூடியது, அப்பகுதி சார்ந்த சாதிய அரசியல். இந்நாவலில் வரும் நாயகன் காளி இதனைப் பல இடங்களில் உறுதிப்படுத்துகிறான். ‘ஒரு பொம்பள சாதிக்குள்ள எத்தன பேருகிட்டப் போனாலும் தப்பில்ல. பொழங்கற சாதிக்காரனோட போனாக்கூடப் பொறுத்துக்குவாங்க. தீண்டாச் சாதியோட போனா அவ்வளவுதான். ஊர உட்டே ஏன் சாதிய உட்டே தள்ளி வெச்சிருவாங்க. இன்னைக்கு அப்பிடியா? சாதிக்குள்ளேயே ஒருத்தனோடதான் இருக்கோனுங்கறம். அப்பறம் எப்படி? வீதியில சுத்தறதுல பாதிக்குமேல திரியறது தீண்டாச்சாதித் தண்டுவப் பசங்கதான். அதுக்கப்பறம் என்னால பொன்னாளத் தொடவே முடியாது. கொழந்த பொறந்தாலும் தொட்டுத் தூக்க முடியாது போ’ என்கிறான். மேலும் ‘அதுமில்லாத அப்பறம் எல்லாரும் ‘வறடன்’னு என்னயப் பாத்துச் சிரிப்பீங்க’ என்கிறான். இதுதான் சாதிய அரசியல்; இதுதான் ஆண்களின் நிலைப்பாடு. அச்சமூகத்தைச் சார்ந்த பெண்கள் காலந்தோறும் அச்சமூக ஆண்களால் பல நிலைகளில் நுகர்வுப் பொருளாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதுதான் காளியின் உரையாடலில் வெளிப்படுகிறது. பெண்கள் அவள் சாதியைச் சார்ந்த ஆண்களோடு உறவு வைத்துக்கொள்வது ஒரு குறிப்பிட்ட காலம்வரை தவறில்லை; ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினரோடு உறவுகொள்ளக் கூடாது. அடுத்த காலகட்டதில் அதே பெண் அவள் சாதியைச் சார்ந்த கணவனல்லாத வேறு ஆண்களோடும் உறவுகொள்ளக் கூடாது. இவ்விடத்தில் ஒழுக்கம் என்பது காலத்திற்கேற்ப வெவ்வேறு போர்வைகளைத் தனக்குமேல் போர்த்திக்கொள்கிறது. பிரதியை நுட்பமாக அணுகும்போது, காளிக்குப் பொன்னா பதினான்காம் நாள் திருவிழாவிற்குப் போனதில் தவறில்லை; ஆனால் அவள் வேறு சாதியைச் சார்ந்த ஆணோடு கூடிவிடுவாளோ என்ற அருவருப்பும் பின்பு அவளுக்குக் குழந்தை பிறந்து தன்னை ‘வறடன்’ என்று அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற பதற்றமும்தான் துருத்திக்கொண்டு முன் நிற்கிறது. இந்தப் பதற்றம் அச்சமூகத்தைச் சார்ந்த பலருக்கும் உருவாகியிருக்கிறது. இதிலிருந்து ஒரு முடிவுக்கு வரலாம். பொன்னாவின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கையை ஒட்டுமொத்தமாக அச்சமூகம் சார்ந்த பெண்களின் ஒழுக்கமாக மாற்றி வாசிக்கும்போது, காளியின் மேற்கண்ட உரையாடலையும் அச்சமூகம் சார்ந்த ஒட்டுமொத்த ஆண்களின் மனநிலையாகப் புரிந்துகொள்வதில் என்ன தவறு இருக்கிறது. சுடுகாட்டில் குடத்தில் தண்ணீர் கொண்டு வரக்கூட அனுமதிக்காத இச்சமூகத்தின் நெருக்குதலில் இருந்து தப்பிக்க, மரமேறும் தொழில் செய்யும் மண்டையனிடம் ஒரு குழந்தையைக் காளி கேட்கிறான். ‘.............. சானாப் பிள்ள வளர முடியுமா? நெனச்சுப் பேசு ஆமா... அவிய சொந்தக்காரங்க நம்மூடேறிக்கிட்டு ஒதைக்க வந்துருவாங்க’ என்கிறாள் மண்டையனின் மனைவி. காளியின் சித்தப்பா திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். சக்கிலியச் சாதியைச் சார்ந்த ஒரு பையனைத் துணைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார். ‘சக்கிலிப் பையன் ஆக்குன சோத்தத் தின்னுக்கிட்டு நானும் .................... நடக்கறானே நல்லான்’ என்று யாராவது பேசியது தெரிந்தால் ‘சக்கிலிச்சி மணப்பா. சக்கிலிப் பையன் மட்டும் நாறுவானா?’ என்று கேட்டுவிடுவார். இந்த உரையாடல் நாவலை வாசிப்பவர்களுக்கு நிறைய சந்தேகங்களை எழுப்புகிறது. ஆண்கள் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களோடு உறவுகொள்வது தவறல்ல; பெண்களாக இருந்தால் அது தவறு. ஒழுக்கம் என்பது இரண்டு நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது; பால்கள் சார்ந்து அது தன் முகத்தை மாற்றிக் கொள்கிறது. இந்நாவலை பெண்களின் ஒழுக்கம் சார்ந்து எதிர்ப்பவர்கள், இச்சமூகத்தைச் சார்ந்த ஆண்கள் குறித்த பதிவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ‘மாதொருபாகன்’ முழுக்க முழுக்க குழந்தைப்பேறற்ற ஒரு பெண், இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகளும் அக்காலத்தில் நிலவிய சாதியக் கட்டுமானத்தையும்தான் வெளிப்படுத்துகிறது. இந்த நோக்கத்தில்தான் இந்தப் பிரதியை அணுகவேண்டும். இந்த நெருக்கடிதான் அப்பெண்ணை ஒரு தீர்வைத் தேடி நகர்த்துகிறது. இப்பிரதியை எதிர்ப்பவர்கள் ஏற்கனவே இத்தன்மையோடு உருவாக்கப்பட்டுள்ள பிரதிகளையும் எதிர்க்க வேண்டும் என்று கூறுவதில் தவறொன்றுமில்லை. பெண்களின்மீது கட்டப்பட்டுள்ள போலி மதிப்பீடுகள் சரியும்போதெல்லாம் அதனைத் தக்கவைத்துகொள்ள சாதியையும் மதத்தையும் துணைக்கழைப்பது அபாயகரமான அரசியல் மாதொருபாகன்: ஸ்221 நடவடிக்கையாகும். ஒரு புனைவில் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் எடுத்து அரசியலாக்குவது, சமூக அக்கறை சார்ந்து எழுதப்படுகிற எல்லா பிரதிகளிலும் சாத்தியம். ‘இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமேயில்லை. அந்தப் பெண்கள் நன்றாகச் சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப்போனார்கள். ‘இன்னக்கி நம்மள எவன் பாக்கறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னக்கித் தேவடியாதான்’ என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்’ என்ற கதாபாத்திரத்தின் உரையாடலை எழுத்தாளனின் கருத்தாகப் புரிந்துகொள்வது எழுத்து குறித்த புரிதலின்மையே காட்டுகிறது. தான் உருவாக்கிய கதாபாத்திரத்தைப் பின்தொடர்ந்து செல்வதுவதான் எழுத்தாளனின் பணி. அதன் நடவடிக்கைகளைச் செம்மைப்படுத்துவதல்ல என்பதைப் புரிந்துகொள்ள ஓர் எழுத்தாளனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ‘மாதொருபாகன்’ பிரதி கொங்கு மண்டலத்தில் இறுக்கமாகக் கடைபிடிக்கப்பட்ட சாதியக் கட்டுமானத்தைத்தான் விமர்சனத்துக்கு உட்படுத்துகிறது. இதனைப் பெருமாள்முருகன் தொடர்ந்து செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். பெருமாள்முருகனின் இச்செயல்பாட்டை சகித்துக்கொள்ள முடியாதவர்கள், பெண்களின் கற்பு சார்ந்த பிரதியின் ஒருபகுதியை அரசியலாக்குகின்றனர். இதற்கு சாதியையும் கடவுளையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ‘மாதொருபாகன்’ புனைவில் ஆசிரியர் சார்ந்தும் விமர்சனத்தை முன்வைக்க முடியும். அதற்கான வெளியும் நாவலில் உள்ளது. கொங்கு மண்டலப் பகுதியைச் சார்ந்த சமூகத்தின் சாதி சார்ந்த ஆண்களின் பதட்டம் பெருமாள்முருகனுக்கும் இருந்திருக்கிறது. குழந்தைவேண்டி பதினான்காம்நாள் திருவிழாவுக்குச் செல்லும் பொன்னா, தனக்குக் குழந்தைப்பேறு அளிக்கும் சாமியைத் தேடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து ஒருவன் வருகிறான். அவனுடைய உருவம், பதினான்கு வயதில் அவள் விரும்பிய சக்தியின் உருவத்தைப் போன்றுள்ளது. பொன்னாவின் பண்ணையத்தில் ஆடு மேய்த்தவன்தான் இந்த சக்தி. அவள் விரும்பிய அவனை இப்போது தவிர்க்க நினைக்கிறாள். காரணம் சாதி. இந்த இரண்டு நிலைப்பாட்டிற்கும் இருக்கும் இடைப்பட்ட காலம் சாதி சார்ந்த புரிதலை அவளுக்கும் உண்டாக்கியிருக்கிறது. ஆனால் சக்தியைப் பொன்னா தவிர்ப்பதற்கு ஆசிரியர் கற்பிக்கும் காரணம் செயற்கையானது. இதுபோன்ற இடங்களையும் நாவலில் அடையாளப்படுத்த முடியும். பலநேரங்களில் ஆசிரியர் புனைவைவிட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்படத்தான் செய்கிறது. இது பெருமாள்முருகனுக்கும் நிகழ்ந்திருக்கிறது. நாவல் எதிர்ப்பாளர்களால் பெண்களின் கற்பு சார்ந்த விடயங்கள் முதன்மைப் படுத்தாமல் இருந்திருந்தால், ‘மாதொருபாகன்’ மேற்கண்டது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். நிலவுடைமைச் சமூகத்தில் குழந்தைக்காக பெண்களின் உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுள் ஒன்று இப்புனைவு முன்வைக்கும் சடங்கு. இதுபோன்ற ஏராளமான சடங்குகளை வெவ்வேறு நிலம்சார்ந்து உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அவைகளெல்லாம் தொகுக்கப்படும்போது இச்சடங்கு அதன் வீரியத்தை இழக்கும். மேன்மை, ஜூலை 2016